சிக்னேச்சர் பாலம்: சுவாரஸ்யத் தகவல்கள்

சிக்னேச்சர் பாலம்: சுவாரஸ்யத் தகவல்கள்!

டெல்லி, வஜிராபாத்தில் யமுனை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள ‘சிக்னேச்சர்’ பாலம் நேற்று முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இது வழக்கமான பாலங்களை போல அல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

ஏற்கனவே இருந்த குறுகிய பாலத்தில் நடந்த கோர விபத்தில் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த இடத்தில் பாலம் அமைக்க அப்போதைய முதல்வர் சாகிப் வர்மா திட்டமிட்டார்

இதையடுத்து, இந்த இடத்தில் 8 வழித்தடத்துடன் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2004ம் ஆண்டு இந்த பாலத்தை அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் அறிவிப்பு வெளியிட்டார். 2007ம் ஆண்டுதான் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தது. அதன்பிறகு பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், 14 ஆண்டுகளில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள

வட கிழக்கு டெல்ல மற்றும் காஸியாபாத் நகரங்களை இணைக்கும் விதத்தில், வஜிராபாத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியின் வெளிவட்டச் சாலைக்கு முக்கிய இணப்பை இந்த பாலம் வழங்க இருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும். பயண நேரமும் 45 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறையும்.

இந்த பாலம் கேபிள்கள் மூலமாக பிணைக்கப்பட்ட தொங்கு பாலமாக அமைக்கப்பட்டு இருப்பது முதல் சிறப்பு. இந்த பாலத்தில் இரும்பு கற்றைகளால் ஆன 124 கேபிள்கள் மூலமாக பாலம் தாங்கப்படுகிறது. இந்த இரும்பு கற்றைகள் 6,300 டன் எடையை தாங்கும் வல்லமை கொண்டது. 460 டன் எடையிலான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லலாம்.

இந்த பாலத்தின் நடுவில் 154 மீட்டர் உயரத்திற்கு மிகப்பெரிய கோபுரம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கோபுரம்தான் கேபிள் மூலமாக பாலத்தை தாங்கி நிற்கிறது. பார்ப்பதற்கு இருகரம் கூப்பிய கைகள் போன்ற சாயலில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பாலத்தின் நடுவில் கோபுரத்திற்கு மேலே செல்வதற்கு லிஃப்ட் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதிலுள்ள 4 லிஃப்ட்டுகள் மூலமாக 50 பேர் செல்ல முடியும். கோபுரத்தின் உச்சிக்கு சென்று, அங்குள்ள மாடத்தின் மூலமாக டெல்லியின் அழகையும், யமுனை ஆற்றின் அழகையும் கண்டு ரசிக்கலாம். பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரிலிருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தை இது தரும்.

இந்த பாலமானது ரூ.1,344 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கு பகுதியில் 1.5 கிமீ தூரமும், கிழக்கு பகுதியில் 1.8 கிமீ தூரத்திற்கும் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக திறக்கப்பட்டு இருக்கும், இந்த பாலம் போக்குவரத்திற்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளதுடன், சுற்றுலாத் தலமாகவும் அமைகிறது. இதன்மூலமாக, பொருளாதாரம் மேம்படுவதற்கும், இந்த பாலம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் புதிய அடையாளமாகவும், இந்திய பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதமாகவும் இந்த பாலம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

(Courtesy : one india)