இனி ஏடிஎம்களில் மாலை 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது- மத்திய உள்துறை

டெல்லி: ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் வாகனங்களில் பணம் கொள்ளை, திருட்டு, கையாடல், தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்க ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்ஸிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது

வங்கிகளிலிருந்து பணத்தைக் கொண்டுசென்று ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்ஸிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிக்காட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வருகிற 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டு விதிமுறைகளின்படி, நகர்புறங்களில் இரவு 9 மணிக்குப் பிறகு ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபடக் கூடாது. அதே போல, கிராமப் புறங்களில் மாலை 6 மணிக்கு பிறகு ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பக் கூடாது.

பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களில் 2 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இருக்க வேண்டும். மேலும், நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பக் கூடாது.

ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்ஸிகள் ஒரு நாளின் முதல் அரை நாளில் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த அரை நாளில் ஆயுதம் தாங்கிய வாகனத்தில் பணத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த தனியார் ஏஜென்ஸி நிறுவனங்கள் ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்புவதற்கு பணத்தைக் கொண்டு செல்லும்போது, அந்த வாகனத்தில், இரண்டு பயிற்சி பெற்ற ஊழியர்கள், ஆயுதம் தாங்கிய 2 பாதுகாவலர்கள், ஒரு ஓட்டுநர், இரண்டு ஏடிஎம் அலுவலர்கள் அல்லது காவலர்கள் இருக்க வேண்டும்.

ஆயுதம் தாங்கிய இரண்டு பாதுகாவலர்களில் ஒருவர் டிரைவருடன் வாகனத்தில் முன்பகுதியில் அமர்ந்திருக்க வேண்டும். மற்றொருவர் பணம் உள்ள பகுதியில் உள்ளே அமர்ந்திருக்க வேண்டும்.

மேலும், பணத்தை வாகனத்திலிருந்து எடுக்கும்போதோ அல்லது வைக்கும்போதோ அல்லது தேநீர் மற்றும் உணவு வேளையின்போது எல்லா நேரமும் குறைந்த பட்சம் ஒரு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வாகனத்துக்குள்ளே பணப் பெட்டிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வாகனத்தில் பணம் எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்புக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலராக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டும்.

பணம் எடுத்துச் செல்லும் எல்லா வாகனத்திலும், பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதே போல, ஒரு வாகனத்தில் ரூ.5 கோடிக்கு மேல் எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பணத்தை எடுத்துச் செல்லும் வாகனப் பாதுகாப்பு பணிக்கு தனியார் ஏஜென்ஸியைச் சேர்ந்த பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது. இல்லாவிட்டால், அவர் போலீஸ் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்.மேலும், அவருடைய முகவரி, ஆதார், இதற்கு முன் பணி செய்த விவரம் உள்ளிட்ட விவரங்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணப்பெட்டியும் ஊழியர்கள் மட்டுமே திறக்கும் அளவுக்கு சங்கிலி பூட்டுகளால் பாதுகாப்பாக பூட்டியிருக்க வேண்டும். அதற்கான சாவிகளை பாதுகாவலர்கள் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் 5 நாட்கள் வரை வீடியோ பதிவு திறன் கொண்ட சிசிடிவியும் 3 கண்காணிப்புக் கேமிராக்களையும் நிறுவ வேண்டும்.

பாதுகாப்பு எச்சரிக்கைக்காக ஜிஎஸ்எம் ஆட்டோ டயலரும் அபாய சைரன் கருவியும் பொருத்த வேண்டும்.

பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் சைரன் ஒலி கருவி, தீயணைப்பு கருவி, எமர்ஜென்ஸி விளக்கு, ஏதேனும் தாக்குதல் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படியான வசதிகள் இருக்க வேண்டும்.

தனியார் ஏஜென்ஸிகள், பணத்தை எண்ணுவது, வகைப்படுத்துவது, பண்டில் செய்வது, பணத்தை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணத்தை கையாளும் அனைத்து நடவடிக்கையிலும் புதிய விதிமுறைகளின் படி பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும்” என்று அந்த புதிய வழிகாட்டு விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 8000 பணம் நிரப்பும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவையெல்லாம் வங்கி அல்லாத தனியார் ஏஜென்ஸிகள் இயக்குகின்றன. நாடு முழுவதும் இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் தினசரி ரூ.15,000 கோடி பணம் கையாளப்படுகிறது. சில நேரங்களில் இந்த தனியார் ஏஜென்ஸிகள் ஒரே இரவில் பணங்களை நிரப்புவதும் உண்டு.

சில ஆண்டுகளாக ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் பணம், கொள்ளை, திருட்டு, தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துவருவதால், பாதுகாப்பு கருதி மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழிக்காட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.